ஐக்கிய அரபு அமீரகம்: ‘ஹோப்’ விண்கலம், ஒருவழியாக தனது 7 மாத பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது.
அமீரகத்தின் அமல் (ஹோப்) என்ற விண்கலம் ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த 2020 ஜுலை 20ம் தேதி, மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ‘எச் -2 ஏ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
இந்த திட்டத்துக்கான முன்தயாரிப்பு பணிகளை அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
மின்னல் வேகம்
‘ஹோப்’ விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் இது பயணம் செய்தது.
204 நாட்கள்
செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாக குறைக்கப்பட்டது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தை அடைய இந்த விண்கலம் 204 நாட்கள் எடுத்துக்கொண்டது.
இரவு 7.30 மணிக்கு
‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை நேற்று இரவு 7.30 மணியளவில் நெருங்கியது. எனினும், நீண்ட தொலைவு காரணமாக, அதனை உறுதிப்படுத்தும் சிக்னல் 12 நிமிடங்கள் தாமதமாக, இரவு 7.42 மணிக்கு பூமியில் ரிஸீவ் ஆனது.
ஐந்தாவது நாடு
முதல் சிக்னல் கிடைத்ததும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆனந்தக் கண்ணீருடன் கைதட்டி ஆரவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதன் மூலம், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய ஐந்தாவது நாடு எனும் பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றது.
சாதித்துவிட்டோம்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை குறித்து ஐக்கிய அரபு அமீகரத்தின் தொழில்நுட்ப அமைச்சர் சாரா பேசுகையில், “நாங்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிட்டோம். 7 வருடத்திற்குப் பிறகு எனது தோளில் வைக்கப்பட்ட சுமையை இறக்கி வைத்திருப்பதுபோல் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்து மழையில் அமீரகம்
இந்த மகத்தான வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புர்ஜ் கலீபாவில் சிறப்பு வானவேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது.